Wednesday, June 1, 2011

உன்னோடு நான்!



தண்டவாளமாய் சாலை
நுரைவலையாய் வானம்
மழை வெயில் அறியா மாலை வேளை

நம் விரல்களின் ஸ்பரிசத்தால்
சில்லென்ற காற்றை சூடாக்கினோம்

ஆறு மணி நேரம் பேசியிருப்போம்
அரை நொடிக்கொருமுறை பார்த்திருந்தோம்
உடைகள் மட்டும் உரச
உள்ளம் பூரித்திருந்தோம்!

யாருமில்லா வனாந்தரம் அதில்
அடிக்கடி நீ சொல்லும்
காது மடல் ரகசியங்கள்
என் கழுத்தில் படும் உன் மூச்சுக் காற்று
என் உள்ளங்காலும் சிலிர்க்கும்!

பசியை போக்க பேச்சையும்
தாகம் தீர்க்க பார்வையயும்
பரிமாறிக் கொண்டோம்!

கடல் மகளும் கதிரவனும்
முத்தமிட்டு கொண்ட நேரமது!

கருமணலில் கால் தடம் பதித்து
கடலையே விலை பேசினோம்
கால் தடங்களெல்லாம்
காதல் தடங்களாய்!

ஆயிரம் முறை வந்து போனாலும்
அர்த்தம் பட
எதுவும் பேசாது அலை...
அது போலதான் நீயும் என்றேன்!

ஏதேதோ பேசினாய்...
கரையை அளக்க வேண்டுமென்றாய்
கடலை கடக்க வேண்டுமென்றாய்
கடல் நீரில் கால் வைத்து
என் கை பற்றினாய்!

அலைக்கு உன் மேல் ஆசை போலும்
அடித்து தூக்கியது
பறந்து விழுந்தோம்!

கரைமேல் நான்
என்மேல் நீ!

அலைக்கு நன்றி!