Monday, August 22, 2011

தேவதை அவள்..


இருள் மட்டுமே சூழ்ந்த
தனிமை நிறைந்த உலகமது..
பட்டாம்பூச்சியின் ஸ்பரிசம் கூட உணர்ந்திடா மனம் எனது..
இருள் விலக்கிய மின்மினி தேவதை அவள்..

அவளது வெளிச்சம் கொஞ்சம்
ஆனால் வீச்சு அதிகம்...
என் கை பிடித்து
கவி கற்றுக் கொடுத்தாள்..
கடல் அடியில் செவ்வானம்
காட்டினாள்
தென்றல் வழியும் மெல்லிசை
ஊட்டினாள்
கொட்டும் மழையும் கொஞ்சும் மழழையும்
மலை மேல் வானமும்
குதித்தெழும் அருவியும்
சட்டென பறக்கும் சிட்டுக் குருவியும்
இசையும் மொழியும் தமிழும்
அழகும் அழகியலும் அத்தனையும்
அள்ளித் தெளித்து இதுதான் உலகம் என்றாள்..!

அத்தனையும் கற்றுத் தேறும்
முன்னே காணாமல் போனாள்
கானலாய் ஆனாள்!

இன்று
வெளிச்சம் மட்டுமே நிறைந்த
அழகிய உலகம் எனது...
பல நூறு நிலாக்களுக்கும்
பல்லாயிரம் நட்சத்திரங்களுக்கும்
பஞ்சமில்லை என் வழியில்..

ஆயினும்
நிலவின் முழுஒளி
இரவை விழுங்க
என் நிழல் காட்டி இருள் வளர்த்தேன்..
எனக்குள் கரைந்து போன
மின்மினியின் வரவை
எண்ணி!

Saturday, August 13, 2011

காதல் தவிர வேறென்ன?!-2


உன்னை அழவிடாமல் நானும்

என்னை அழவிடாமல் நீயும்

கவனமாக காய் நகர்த்தும்

இச்சதுரங்க ஆட்டத்தில்

கட்டிப் புரண்டு அழுகிறது

நம் காதல்!

------------ <3

இப்போதெல்லாம்

நீ கனவில் கூட

வருவதில்லை...

தூக்கமே கனவாகிப்

போனதால்...!!!

Friday, August 12, 2011

காதல் தவிர வேறென்ன?!


அழுது புலம்பி அரற்றி என்ன பயன்?..

அதற்கு பதிலாய்

கடைசியாக ஒரு முறை

உன் நேசத்தை சொல்லி விட்டு போ..

நீ இல்லாத இடத்தில்

உன் நினைவுகளாவது நெஞ்சோடு

நிறைந்திருக்கட்டும்!

--------------------
நம் காதலின் கடைசி புள்ளியாய்

நீ விட்டு சென்ற

கண்ணீர் துளியெல்லாம்

வெள்ளமாய் மாறி

மீண்டும் மீண்டும் மூழ்கிப் போகிறேன்

காதல் கடலில்!
--------------------

விழுவது தவறல்ல

விழுந்த பின்

எழ நினைப்பது தான் தவறு...

காதலில்!
---------------------
நீ விலகி சென்றாலும்

என்னை விலக்கிச் சென்றாலும்

நீ விட்டுச் சென்ற

என் உயிர் மொத்தமும்

எடை கூட்டி செல்லும்

என் இறுதி ஊர்வலத்திலும்

உன் காதலோடு!